வரதட்சணை கேட்ட கணவர்; போலீஸ் ஸ்டேஷனில் வைத்து துவம்சம் செய்த குத்துச்சண்டை வீராங்கனை; என்ன நடந்தது?
ஹரியானாவைச் சேர்ந்தவர் தீபக் நிவாஸ் ஹோடா. கபடி வீராரான இவர் இந்திய அணிக்காக விளையாடித் தங்கப்பதக்கம் உட்படப் பல்வேறு பதக்கங்களைப் பெற்று தந்துள்ளார்.
அர்ஜூனா விருதும் பெற்று இருக்கிறார். அதே மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை சவீட்டி போரா என்பவரைக் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டார் தன்னை வரதட்சணை கேட்டுச் சித்ரவதை செய்து அடித்து உதைப்பதாகச் சவீட்டி போலீஸில் புகார் செய்திருந்தார்.
ஆடம்பர கார் கேட்டதாகவும், அதனை வாங்கிக்கொடுத்த பிறகும் பணம் கேட்டு அடித்து உதைத்ததாகச் சவீட்டி போரா போலீஸில் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் 25ம் தேதி தீபக் ஹோடா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஹிசார் போலீஸில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இது குறித்து விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு வரும்படி சம்மன் அனுப்பப்பட்டது. சவீட்டி விவாகரத்து கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இப்பிரச்னை குறித்துப் பேசுவதற்காகச் சவீட்டி, தீபக் ஹோடா மற்றும் இருவரது உறவினர்கள் ஹிசார் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒரு அறையில் அமர்ந்திருந்தனர்.
அந்நேரம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென எழுந்த சவீட்டி தனது கணவனை நோக்கிப் பாய்ந்து அவரை அடித்தார். அவரது கழுத்தைப் பிடித்துக்கொண்டு கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி அடித்து உதைத்தார்.
உடனே உறவினர்கள் தலையிட்டு அவரை விடுவித்தனர். அப்படி இருந்தும் தனது கணவனைப் பார்த்து கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி மீண்டும் அடிக்க பாய்ந்தார்.
அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்தனர். போலீஸ் நிலையத்திற்குள் நடந்த இச்சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.
இது குறித்துச் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய பெண் அதிகாரி சீமா கூறுகையில், "விசாரணைக்கு ஆஜராகும்படி தீபக்கிற்கு 3 முறை சம்மன் அனுப்பி இருந்தோம். ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

வரதட்சணை கேட்டு அடித்து உதைத்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. கார் கேட்டுக் கொடுத்ததாகவும், மீண்டும் பணம் கேட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது'' என்றார்.
இது குறித்து தீபக் ஹோடா கூறுகையில், ''மருத்துவக் காரணங்களால் நான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நிச்சயம் விசாரணைக்கு ஆஜராவேன். மருத்துவ சான்றிதழ் கொடுத்திருக்கிறேன். எனது மனைவியைச் சந்தித்துப் பேச அனுமதிக்க மறுக்கின்றனர்'' என்றார்.
போலீஸ் நிலையத்தில் கணவனைத் தாக்கியது குறித்து சவீட்டியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88