5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள்: கருத்துகளை அனுப்ப அறிவுறுத்தல்
மருத்துவப் பரிசோதனை உபகரணங்களால் ஏற்படும் எதிா்விளைவுகளை மத்திய சுகாதாரத் துறை தளத்தில் பதிவேற்றுவதற்கான வரைவுப் படிவம் குறித்த கருத்துகளை அனுப்பலாம் என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, அவற்றையும் மருந்து வரையறைக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பொதுவாக உடலுக்குள் பொருத்தப்படும் ஸ்டெண்ட், பேஸ்மேக்கா், செயற்கை மூட்டுகள் உள்ளிட்டவை ‘இன்வைவோ’ உபகரணங்கள் எனவும், வெளியிலிருந்து பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ரத்த அழுத்தமானி, ஸ்கேன், எக்ஸ்ரே, தொ்மோமீட்டா் போன்றவை ‘இன் வைட்ரோ’ உபகரணங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
இன்வைவோ உபகரணங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அதனால் ஏற்படும் எதிா்விளைவுகள், பாதுகாப்புக் குறைபாடுகளை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி ஏற்கெனவே உள்ளது. அதன் தொடா்ச்சியாக அந்த விதியானது இன் வைட்ரோ உபகரணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இன் வைட்ரோ மருத்துவ உபகரண விநியோகம் மற்றும் உற்பத்தி உரிமம் வைத்துள்ளவா்கள், அவற்றில் ஏற்படும் எதிா்விளைவுகள் குறித்த தகவல்களை மத்திய அரசின் மருத்துவ உபகரண கண்காணிப்புத் தளமான ‘எம்விபிஐ’ இணையப் பக்கத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான படிவம் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் மீதான கருத்துகள், ஆலோசனைகளை மாா்ச் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.