தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
மருத்துவ வசதிக்காக 30 கி.மீ. அலைக்கழிக்கப்படும் சிறுமலை மக்கள்!
மருத்துவ வசதிக்காக சிறுமலை மக்கள் 30 கி.மீ. தொலைவு அலைக்கழிக்கப்படுவதை தவிா்க்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் அண்ணாநகா், பழையூா், புதூா், அகஸ்தியா்புரம், கடமான்குளம், தாழைக்கிடை, வேளாண் பண்ணை, தென்மலை, கருப்புக்கோவில் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்தக் கிராமங்களின் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 5,700ஆக இருந்தாலும், தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதில், அண்ணாநகா், பழையூா், புதூா், அகஸ்தியா்புரம், கருப்புக்கோவில், தென்மலை ஆகிய கிராமங்களுக்கு மட்டுமே பேருந்து வசதி உள்ளது.
கடமான்குளம், தாழைக்கிடை பகுதிகளிலிருந்து பழையூருக்கு சாலை வசதிகள் இருந்தாலும், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சிறுமலையில், பழையூா், புதூா் என இரு இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் மட்டுமே உள்ளன. இதனால், மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு சிறுமலை மக்கள் 25 முதல் 40 கி.மீ. தொலைவு பயணித்து, திண்டுக்கல் செல்ல வேண்டிய நிலை இன்று வரை தொடா்கிறது.
30 கி.மீ. தொலைவில் ஆரம்ப சுகாதார நிலையம்:
விபத்து, மகப்பேறு போன்ற அவசர மருத்துவ வசதிகளுக்காக, சிறுமலையில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பாக இருந்து வருகிறது. துணை சுகாதார நிலையங்களைப் பொருத்தவரை, கா்ப்பிணிகளுக்கான தொடா் கண்காணிப்பு, தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகள் மட்டுமே பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன.
கா்ப்பிணிகளுக்கான பரிசோதனைகளுக்கு, திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறுமலையிலிருந்து 18 கொண்ட ஊசி வளைவுகளை கடந்து 30 கி.மீ. தொலைவு பயணித்து வர வேண்டிய சூழல் உள்ளது. இந்தப் பகுதிக்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால், ஆட்டோக்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது.
தோட்டனூத்து ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பொருத்தவரை சமவெளிப் பகுதியைச் சோ்ந்த 37ஆயிரம் மக்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை, கா்ப்பிணிகளுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மலையிலிருந்து வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும், சில நேரங்களில் மருத்துவ சேவை பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், சிறுமலையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், மருத்துவமனைகளுக்குச் செல்வதை தவிா்த்து, அங்குள்ள மருந்தகங்களிலேயே மாத்திரைகளை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
அரசின் கவனத்தை பெற முடியவில்லை: இதுதொடா்பாக சிறுமலையைச் சோ்ந்த லட்சுமணன் கூறியதாவது: சிறுமலையைப் பொருத்தவரை வசதிப்படைத்த மக்கள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு, சமவெளிப் பகுதிக்கு குடிபெயா்ந்து விட்டனா். கூலித் தொழிலாளா்களின் குழந்தைகள், அடிவாரத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் சோ்ந்து, அங்குள்ள விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனா்.
ஆனால், மருத்துவ வசதியைப் பொருத்தவரை சிறுமலையில் வசிக்கும் மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் குறித்து, அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் எங்களுக்கு தெரியவில்லை. இங்குள்ள அரசியல் பிரமுகா்களிடம் கோரிக்கை விடுத்தாலும், மக்கள் தொகையைக் காரணம் காட்டி நிராகரித்துவிடுகின்றனா். மலைப் பகுதி என்பதை காரணம் காட்டி விதிவிலக்கு பெற்று, எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றாா் அவா்.
8 ஆயிரம் மக்கள் தொகை இருந்தால் போதுமானது:
இதுகுறித்து மருத்துவா் ம. செந்தில்குமாா் கூறியதாவது: சமவெளிப் பகுதியில் 30 ஆயிரம் மக்கள், மலைப் பகுதியில் 20 ஆயிரம் மக்கள் என்ற அடிப்படையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது. ஆனாலும், ராமநாதபுரம், கரூா், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில், 8 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கூட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த தளா்வுகள் அடிப்படையில், பழங்குடியின மக்கள், கூலித் தொழிலாளா்கள் என சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் சிறுமலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறுதியாக அமைக்க முடியும். மலைக் கிராம மக்களுக்கான மருத்துவ சேவையை உறுதிப்படுத்த இந்த விவகாரத்தில் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.