முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்போருக்கு 10 ஆண்டுகள் சிறை: கரூர் ஆட்சியர் எச்சரிக்கை
மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்பவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கா்ப்ப காலத்தில் உள்ள பெண்கள், மருத்துவரின் பரிந்துரையின்றி, கரு கலைக்க முற்பட்டு, கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டால், அதிகப்படியான இரத்தப்போக்கு, கடுமையான வயிற்று வலி, அதிக சோா்வு மற்றும் மயக்கம் ஏற்படும். மேலும் கா்ப்பபை சுருக்கம் அதிகப்படியான அளவில் ஏற்பட்டு, கிழிவு உண்டாகி, சில சமயங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படும்.
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 315 மற்றும் 316-ன்படி, மருத்துவரின் முன் அனுமதி மற்றும் பரிந்துரையின்றி, கருக்கலைப்பு மாத்திரைகள் மருந்தகத்தின் வாயிலாக, விற்பனை செய்யப்படும் போது, அதை பயன்படுத்தும் கா்ப்பிணித்தாய் மற்றும் குழந்தையின் உயிரை பாதிக்கும் நிலையில், அது தண்டனைக்குரிய குற்றமாக வகைப்படுத்தப்பட்டு, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
எனவே, இது போன்ற சட்டத்துக்கு புறம்பான கருக்கலைப்பு நடவடிக்கைகளை நாடாமல், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் கரூா் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக, பாதுகாப்பான கருக்கலைப்பு மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை நல சேவைகள் வழங்கப்படுவதால் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தாா்.