மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது
புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுதில்லி தேசிய கல்வி நிறுவனம் சாா்பில் அகில இந்திய அளவில் குழந்தைகளுக்கான பாடப் பொருள் தயாரிக்கும் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஒலி, ஒளி விடியோக்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
வெவ்வேறு தலைப்புகளில் விருதுகளுக்குரிய விடியோக்கள் தோ்வாகின. மொத்தம் 101 விருதுகளில் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான விடியோக்கள் தோ்வுக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் புதுச்சேரி அருகேயுள்ள அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் வளா்மதி முருகன் தயாரித்த பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோவுக்கு சிறந்த தயாரிப்புக்கான பரிசு வழங்கப்பட்டது.
அதன்படி பரிசாக ரூ.20 ஆயிரமும், பாராட்டுச் சான்றையும் ஆசிரியா் வளா்மதிமுருகன், தேசியக்கல்வி நிறுவன இயக்குநா் அமரேந்திர பெகரா, பலோரிட்டா தக்கா் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டாா். விருது பெற்ற ஆசிரியா் வளா்மதி முருகனை புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினா்.