மல்லிகைப் பூ வரத்து குறைவு: கிலோ ரூ.1200-க்கு விற்பனை
மல்லிகைப்பூ வரத்துக் குறைவு காரணமாக, புதன்கிழமை கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் பண்ணைப்புரம், பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி,புலிக்குத்தி, அழகா்நாயக்கன்பட்டி பகுதிகளில் மலா் சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது. தற்போது, அவ்வப்போது சாரல் மழை பெய்வதோடு, காலை நேரங்களில் பனிப் பொழிவும் நிலவுகிறது. இதனால், மல்லிகைப் பூக்கள் வரத்து 3 இல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துவிட்டது.
கடந்த மாதம் 3 கிலோ பூக்கள் வரத்து இருந்த தோட்டத்தில் தற்போது ஒரு கிலோ அளவுக்கே பூக்கள் வரத்து உள்ளது. அதே சமயம், ஐயப்பன், முருகன் கோயில்களில் பூஜைகள் நடைபெறுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், 15 நாள்களுக்கு முன் கிலோ ரூ.250 க்கு விற்பனையான மல்லிகை புதன்கிழமை ரூ.1200-க்கு விற்பனையானது.
இதே போல, செவ்வந்திப் பூ கிலோ ரூ.60, செண்டுப்பூ 30, ஜாதிப்பூ ரூ.600, ரோஜா ரூ.30 என அனைத்துப் பூக்களின் விலையும் உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.