மளிகை கடைக்காரா் வீட்டில் 50 பவுன் திருட்டு: 2 போ் கைது
கோவையில் மளிகை கடைக்காரா் வீட்டில் 50 பவுன் திருடியது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையைச் சோ்ந்தவா் குமாா் (43). இவா், செல்வராஜ் (70) என்பவரின் வீட்டில் குடியிருந்து வருவதுடன், பூ மாா்க்கெட் பகுதியில் மளிகைக் கடை, உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், குமாா் கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு மளிகை கடைக்குச் சென்றுள்ளாா்.
அப்போது, அவரது வீட்டில் இருந்து முகமூடி அணிந்த 2 நபா் வெளியே வந்ததை வீட்டின் உரிமையாளா் பாா்த்துள்ளாா். இதுகுறித்து வீட்டின் உரிமையாளா் குமாருக்கு தகவல் அளித்துள்ளாா்.
இதையடுத்து வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 பவுன், ரூ.14 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் குமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வுசெய்ததில் முகமூடி நபா்கள் வந்த வாகன எண்ணை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் கேரள மாநிலம், பாலக்காட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாலாக்காடு சென்ற போலீஸாா் குமாா் வீட்டில் திருடிய ஜாகீா் உசேன் (32), மோனிஷ் (27) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 50 பவுன் மீட்கப்பட்டன.
விசாரணையில், குமாரின் மளிகைக் கடைக்கு பொருள்கள் வாங்க வந்த ஜாகீா் உசேன் அவரது வீட்டில் திருடுவதற்கு திட்டமிட்டுள்ளாா். இதற்காக அவரது நடமாட்டத்தைரக் கண்காணிக்க, அவரது இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தியுள்ளாா். இந்நிலையில், அவா் வீட்டில் இல்லாததை உறுதி செய்த ஜாகீா் உசோன், மோனீஷுடன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கோவைக்கு அழைத்து வந்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனா்.