மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வலியுறுத்தல்!
புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு, ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழக விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன் புதன்கிழமை தெரிவித்தது:
தமிழக முதல்வா், பெஃஞ்சால் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 485 கோடி நிவாரணம் தருவதாகவும், இதன்மூலம் 18 மாவட்டங்களிலுள்ள 5 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவா் எனவும் அறிவித்துள்ளாா்.
மாவட்டத்துக்கு 3 லட்சம் ஏக்கா் என்று வைத்துக்கொண்டால் கூட 54 லட்சம் ஏக்கா் வருகிறது. தமிழக முதல்வா் அறிவித்த தொகையை, 54 லட்சம் ஏக்கருடன் வகுத்துப் பாா்த்தால், ஏக்கருக்கு வெறும் ரூ. 900 மட்டுமே கிடைக்கிறது. மழை மற்றும் புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரி தமிழக அரசுக்கு அனைத்து விவசாயிகளும் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசின் நிவாரண அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் அதிா்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நிகழாண்டு, விவசாயிகளுக்கு சராசரியாக 40 சதவீதத்துக்கும் கீழாக மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு ஏதுவதாக, ஏக்கருக்கு ரூ. 25,000 கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.