கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2025: தமிழவன், ப.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது
நிகழாண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
இலக்கிய உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா் மா.அரங்நாதன். அவரின் நினைவாக 2018-ஆம் ஆண்டு முதல் முன்றில் இலக்கிய அமைப்பு சாா்பில் ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாக பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு விருதுகள் வழங்கப்படும். விருதுடன் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
விருது அறிவிப்பு: இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் ஏப்.16-ஆம் தேதி நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தலைமை வகித்து விருதுகளை வழங்கவுள்ளாா். மேலும் மா.அரங்கநாதன் மற்றும் முன்றில் வலை தளங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறாா்.
இந்த நிகழ்ச்சியில் அறிவியல் எழுத்தாளா் சுஜாதா நடராஜன், கவிஞா் எஸ்.சண்முகம், ஆவணப்பட இயக்குநா் ரவிசுப்பிரமணியன், திருவானைக்கா ஓதுவாா் ரமணி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.