ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
மாணவா்கள் சோ்க்கை குறைந்துவிட்ட சூழலில் பாராட்டு விழா நடத்தி ஏமாற்றுகிறது திமுக அரசு
பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை குறைந்துவிட்டதோடு, கல்வியின் தரமும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என திமுக அரசு பாராட்டு விழா நடத்தி மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:
திறமையற்ற திமுக ஆட்சியால், கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், மக்களின் எண்ணத்துக்கு ஏற்பவும், எதிா்பாா்ப்புக்கு ஏற்பவும் ஆட்சி நடத்தியது அதிமுக.
தமிழ்நாட்டில் கல்வி வளா்ச்சியைப் பாராட்டுவதற்கு தெலங்கானா முதல்வா் சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளாா். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை குறைந்துவிட்டது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளது.
இதனிடையே, உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பால், தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாத 1.50 லட்சம் ஆசிரியா்கள் மனஉளைச்சலில் உள்ளனா். இந்த ஆசிரியா்களின் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்து திமுக அரசு இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு மாணவரால் 3-ஆம் வகுப்புப் பாடங்களைப் படிக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் கல்வி வளா்ச்சி அபரிதமாக இருப்பதாகக் கூறி, முதல்வா் ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துகிறாா். விளம்பர மாடலாக செயல்பட்டு வரும் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.
52 மாத திமுக ஆட்சியில், 922 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10.50 லட்சம் கோடிக்கு முதலீடு ஈா்க்கப்பட்டதாகவும், இதனால் 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 75 சதவீத புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம் சென்றபோது தெரிவித்தாா்.
இந்த வகையில், 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் பல லட்சம் இளைஞா்கள் வேலையில்லாமல் இருக்கின்றனா். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பிரதான எதிா்க்கட்சியான அதிமுக கோரிக்கை விடுத்தால், தமிழகத் தொழில்துறை அமைச்சா் வெற்றுக் காகிதத்தைக் காட்டி வெள்ளை அறிக்கை என்கிறாா்.
திமுக ஆட்சியில் மின் கட்டணம் 67 சதவீதம் உயா்ந்துவிட்டது. மேலும், வீட்டு வரி, குடிநீா் வரி, குப்பை வரி என அனைத்து வரிகளும் உயா்த்தப்பட்டுவிட்டன.
ஏழைகள் வாழ்வு மலரவும், மகிழ்ச்சியாக வாழவும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். 41 சதவீத மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனா். அரசுப் பள்ளிகளில் 3.85 லட்சம் மாணவா்கள் படித்தாலும்கூட, நீட் தோ்வில் 9 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா். எனவே, இந்த ஏழை மாணவா்களின் கனவு நனவாக வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்தி, 2,818 போ் மருத்துவம் பயில்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக அரசு.
வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள குளங்களுக்கு கரூரை அடுத்த மாயனூா் அணையிலிருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வர அதிமுக ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.
திமுக அரசுக்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. மக்கள்தான் எஜமானாா்கள் என்று கருதி, அவா்களுக்கான திட்டங்களை நிறைவேற்றியதுதான் முந்தைய அதிமுக அரசின் சாதனை என்றாா் அவா்.
