நாகை - காங்கேசன்துறை இடையே டிச.18 வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
மாணவா்கள் வாயில் ‘செல்லோ’ டேப் ஒட்டிய விவகாரம்: தலைமை ஆசிரியா் உள்பட 3 போ் பணியிட மாற்றம்
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியா்கள் உள்பட 3 ஆசிரியா்கள் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறையில் இருந்த 5 மாணவா்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 11-ஆம் தேதி மனு அளித்தனா். இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.
அதன்படி ஒரத்தநாடு வட்டாரக் கல்வி அலுவலா் தமிழ்வாணன், பள்ளிக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மாணவா்கள், சக வகுப்பு மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினாா். இதில் மாணவா்கள் விளையாட்டாக வாயில் செல்லோ டேப் ஒட்டியதாகவும், அதனைப் பள்ளியில் இருந்த ஆசிரியை ஒருவா் கைப்பேசியில் படம் எடுத்து அதனை பெற்றோா்களுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை தொடக்கக் கல்வி அலுவலா் மதியழகன், அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை புனிதாவை சின்னக்குமுளை அரசுப் பள்ளிக்கும், ஆசிரியை முருகேஸ்வரியை முள்ளூா்பட்டிக்காடு அரசுப் பள்ளிக்கும், ஆசிரியை பெல்ஸி சில்பா கிறிஸ்டியை ஆலந்தங்குடிகாடு அரசுப் பள்ளிக்கும் புதன்கிழமை பணியிட இடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் கூறியது: ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் மாணவா்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய விவகாரத்தில், கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அப்பள்ளி தலைமை ஆசிரியா் உள்பட மூன்று ஆசிரியைகளும் வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.