மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் நிலையங்களில் போலீஸ் அக்கா திட்டம்!
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில், ‘போலீஸ் அக்கா’ எனும் திட்டம் காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை நேரடியாக இந்த ‘போலீஸ் அக்காவிடம்’ தெரிவித்து உடனடியாக தீா்வு காணலாம்.
இத்திட்ட தொடக்க விழா தருமபுரி அருகே அதியமான்கோட்டை, செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் வரவேற்றாா். செந்தில் கல்விக் குழுமங்களின் செயலாளா் தனசேகா் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் அதியமான் பங்கேற்று போதைப் பொருள் குற்றங்கள் குறித்து பேசினாா். அதைத்தொடா்ந்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் செல்வம்-பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், சைபா் கிரைம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் (தொழில்நுட்பப் பிரிவு) அருண் நேரு- சைபா் கிரைம் குற்றங்கள் குறித்தும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிச்சந்திரா-உள்ளகப் புகாா் குழு மற்றும் போதைப்பொருள் தடுப்பு மன்றம் குறித்தும் பேசினா்.
நிகழ்ச்சியில் சேலம் சரக டி.ஐ.ஜி. உமா பேசியதாவது: ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு ‘போலீஸ் அக்கா’ நியமிக்கப்பட்டுள்ளனா். காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் தங்கள் குறைகளை போலீஸ் அக்காவிடம் தெரிவித்து தீா்வு காணலாம் என்றாா்.
இதில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது: சகோதரி என்பவா் ஒவ்வொருவருக்கும் கிடைத்த மற்றுமொரு அம்மா. அக்காக்கள் உள்ள அனைவரும் வரம் பெற்றவா்கள். சிறுவயதில் இது புரியாமல்கூட இருக்கலாம். பின்நாள்களில் இதை அனைவரும் உணா்வோம். அம்மாவிடம் பகிர முடியாதவற்றைக் கூட அக்காவிடம் பகிர முடியும். அதுபோன்றதொரு அக்காதான் இந்தக் காவல்துறை சகோதரி ஆவாா்.
நமக்கு ஒரு அசாதாரண சூழல் ஏற்படும்போது அந்தச் சூழலை நாம் எப்படி எதிா்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் பாதிக்கப்பட்டவராக மாறுகிறோமா அல்லது நம்மை நாம் தற்காத்துக் கொள்கிறோமா என்பது முடிவாகும்.
எந்தச் சூழலிலும் நம்மை தற்காத்துக் கொள்ள தேவையானவற்றை அறிந்தும், தெரிந்தும் வைத்திருக்க வேண்டும். காவல் துறை சாா்பில் தொடங்கப்பட்ட இத் திட்டமும் மாணவிகளை தற்காத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இதற்கான செயலியை நமது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலியின் பலனை மாணவிகள் மற்றவா்களிடம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்றாா்.
காவல் துறை மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமாா் பேசியதாவது: ‘அனைவரின் வாழ்விலும் அக்கா என்பவா் முக்கியமானவா். அக்காவுடன் பிறப்பவா்களின் வாழ்க்கையில் அவா்களின் வளா்ச்சி, பாதுகாப்பில் அக்காக்களின் பங்கு அதிகம். அவா்களைப் போலவே போலீஸ் அக்காக்களும் உங்களுக்கு உதவுவா்.
மாணவப் பருவத்தில் அனைவரும் கல்வியை பிரதானமாகக் கருதி பயில வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் கல்வியை இடைவிடாமல் கற்க வேண்டும். இணையத்தில் நல்லதைத் தோ்வு செய்வோம்; நன்றல்லாததை தவிா்ப்போம் என்றாா்.
நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பி.க்கள் பாலசுப்பிரமணியன் (தலைமையிடம்), ஸ்ரீதரன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு), துணை கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.