நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
`மாநில அரசின் கடமை; முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன்!’ - ஜோதிமணி
"2024-2025 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாத்தியக்கூறு கூட வரவில்லை. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட நிதியில் இதுவரை ஒரு பைசா கூட செலவு செய்யப்படவில்லை" என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார்
ஏன் எங்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்துத் தரக்கூடாது?
இதுபற்றி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, "தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு , நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைத்துத் தருவது தொடர்பான கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மண்டலக்குழு தலைவர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் அலுவலகம் உள்ளது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு அலுவலகம் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள் தானே?. சராசரியாக 15 லட்சம் வாக்காளர்களையும் ஏறக்குறைய 20 லட்சம் மக்களையும் நாங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். ஏன் எங்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்துத் தரக்கூடாது?.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மாநில அரசால் அமைத்து தரப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வேறு சில முக்கியப் பிரச்னைகளும் உள்ளன. கரூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கூட முறையாகச் செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது.
2024-2025-ம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பல்வேறு பணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாத்தியக்கூறு (Feasiablity) கூட வரவில்லை. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட நிதியில் இதுவரை ஒரு பைசா கூட செலவு செய்யப்படவில்லை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ஒரு பைசா கூட செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. இன்னும் ஏராளமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய சூழலில், ஒதுக்கப்படுகிற நிதியை , பயன்படுத்தாமல் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறி நிராகரிப்பது ஒரு கிரிமினல் குற்றம்.
தவறு செய்யும் அதிகாரிகள் காப்பாற்றப்படுகிறார்கள்!
60 சதவிகிதத்துக்கு மேல் கல்விக்கே நான் ஒதுக்கீடு செய்கிறேன். இருந்தும் இதுதான் நிலமை!. கரூர் மாநகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி சில இடங்களில் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியும் பதில் இல்லை. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தவறு செய்யும் அதிகாரிகள் காப்பாற்றப்படுகிறார்கள்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நான்கு மாவட்டங்களிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் நிகழ்வுகளுக்கு மட்டுமே எனது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. வேறு எந்த அரசு நிகழ்வுகளுக்கும் பெரும்பாலும் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை.
குறிப்பாக, மாவட்ட வளர்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ( DISHA) கூட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆய்வு செய்கிறோம். கண்காணிக்கிறோம். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிற ஒன்றிய அரசின் திட்டங்கள் துவக்கவிழா, அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கும் தகவல் தரப்படுவதிலை. அதே போல, அரசுப் பணிகளின் கல்வெட்டுகளில் எங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளப்படுகிறது. பெயர் எழுதுவது முக்கியம் என்று நான் நினைப்பதில்லை என்றாலும் அது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உரிமை மற்றும் விதிகள் சார்ந்த பிரச்னையாகப் பார்க்க வேண்டியுள்ளது.
ஒன்றிய அரசின் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் Protocal வரிசையில் தலைமைச் செயலருக்கு மேலே இருப்பவர். ஆனால், நடைமுறையில் அப்படியெதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் தொடர்பாக நிலவும் பிரச்னைகளை ஏற்கனவே தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மாநில உரிமைகளுக்காகப் போராடும்போது நாங்கள் துணை நிற்கிறோம். ஆனால், அதே தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் பணியை முறையாக, முழுமையாகச் செய்ய முடியாமல் முடக்கப்படும்போது, தமிழ்நாடு அரசு முறையாக நடவடிக்கை எடுக்காததல் தனித்து விடப்பட்டது போல் உணர்கிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்குப் பணி செய்ய கடமைப் பட்டவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மக்கள் வரிப்பணத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நிதிக்கு மக்களே உரிமையாளர்கள். அது மக்களுக்குச் சென்றடையாமல் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அது முறையாக செலவு செய்யப்படுவதை உறுதி செய்வது மாநில அரசின் கடமை. இதே நிலைமை தொடர்ந்தால் நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. அதற்குமுன்பு மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலையிட்டு ,உரிய நடவடிக்கை எடுத்து இப்பிரச்னைகளுக்குத். தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.