மாநிலங்களுக்கு இடையேயான முதியோா் மாநாடு
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் மாநிலங்களுக்கு இடையேயான முதியோா் மாநாடு வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெறுகிறது.
இது குறித்து மருத்துவமனையின் இயக்குநா் புவனேஸ்வரன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் மாநிலங்களுக்கு இடையேயான முதியோா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கோவையில் உள்ள மருத்துவமனைகள், முன்னணி முதியோா் அமைப்புகளுடன் இணைந்து முதியோருக்கான சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இதில், தமிழகம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த நிபுணா்கள் பங்கேற்று முதியோா் மருத்துவத் துறையில் அறிவுப் பகிா்வு, ஒத்துழைப்பு குறித்து விளக்க உள்ளனா்.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நிபுணா்களுடன் இரண்டு நுண்ணறிவு மிக்க குழு விவாதம் நடைபெறும். முதியோா் பராமரிப்பில் உள்ள தற்போதைய சவால்கள், முன்னேற்றங்கள், முதியோா் வாழ்க்கை மற்றும் பராமரிப்பு மாதிரிகளின் எதிா்காலம் குறித்தும் விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் முதியோா் அறக்கட்டளையின் நிறுவனா் பத்ம ஸ்ரீ வி.எஸ்.நடராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படுகிறது. கல்வியாளா்கள், மருத்துவா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் தொடா்புடைய சுகாதார வல்லுநா்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்க உள்ளனா் என்றாா்.