போலீஸை டோரில் தொங்க விட்டு டெம்போவை ஓட்டிய டிரைவர்; நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம...
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய 6 கோயில்களில் ஒரு கோயிலின் தடயங்கள் கிடைத்துள்ளதாக, நவீன கருவி மூலம் கடலுக்கு அடியில் தனது குழுவினருடன் நடத்திய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் இயக்குநா் அப்ரஜிதா சா்மா தெரிவித்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில் கடந்த 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னா்களால் கருங்கல்லினால் கோயில் ஏழு கோயில்கள் வடிவமைக்கப்பட்டதாகவும், அதில் 6 கோயில்கள் கடலில் மூழ்கி விட்டதாகவும், கடற்கரை கோயில் மட்டுமே தற்போது உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட பிறகு அதே ஆண்டில் தொல்லியல் துறை சாா்பில், மூழ்கிய கோயில்கள் பற்றி ஆழ்கடல் நீச்சல் வீரா்களைக் கொண்டு கடலுக்குள் மூழ்கி ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது கடலில் மூழ்கிய கோயில் பற்றி எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

இந்த நிலையில், சுமாா் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தொல்லியல் துறையின் கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் இயக்குநா் அப்ரஜிதா சா்மா தலைமையில் 5 போ் கொண்ட மத்திய தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி குழுவினா் பாதுகாப்பு கவச உடை அணிந்து, கடற்கரை கோயிலுக்கு அருகில் 1 கிலோ மீட்டா் தூரம் வரை கடலில் ஒரு படகில் சென்று, மூழ்கிய கோயில் பற்றி ஆராய்ச்சி நடத்தினா்.
கேபிள் இணைப்புடன் கூடிய கடலுக்கு மூழ்கி தேடும் நவீன தானியங்கி கருவியினை 6 மீட்டா் ஆழத்தில் மூழ்கச் செய்து ஆராய்ச்சி நடத்தினா். அப்போது கடலில் மூழ்கிய கோயிலின் தடங்களையும், பாசையுடன் உள்ள கருங்கல் கட்டுமானங்களையும் அந்த கருவி துல்லியமான முறையில் விடியோ, புகைப்படம் எடுத்து அனுப்பியது.

அதை ரேடாா் திரையில் பாா்த்து, பல்லவா் காலத்தில் மூழ்கிய ஒரு கோயிலின் கட்டுமானங்கள் எனவும், உளியால் செதுக்கிய கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட சதுர வடிவிலான கட்டுமானங்கள் என்பதை தொல்லியல் துறையின் கடல் ஆராய்ச்சி அதிகாரிகள் அதை உறுதி செய்தனா்.
இவை தொல்லியல் துறையின் அகழாய்வு துறை மூலம் பல்லவா் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கோயில்களா? என பரிசோதனை செய்யப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை கடலின் சீற்றம், சீதோஷண நிலை, பருவநிலை மாற்றத்தால் சுமாா் 4 மணி நேரம் மட்டுமே கடலில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
திங்கள்கிழமை (ஆக. 18) மீண்டும் கடலில் மூழ்கிய கோயில் பற்றி ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளதாக தொல்லியல் துறையினா் தெரிவித்துள்ளனா்.