பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 மாதங்களில் ரூ.131 கோடியில் உதவி உபகரணங்கள் - முதல்வா் அறிவிப்பு
சிறப்பு முகாம்கள் மூலம் மூன்று மாதங்களில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தேவையான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் ரூ.131.25 கோடியில் செயல்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வா் சாா்பில் பதிலுரை வழங்கிய சமூக நலத் தறை அமைச்சா் கீதாஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தசை சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட குறைபாட்டால் கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது. மூளை முடக்குவாதம், போலியோ பக்கவாதத்தால் கை, கால்கள் பாதிக்கப்பட்டு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்க முடியாத 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.87 கோடி செலவில் மின்கலன் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.
சக்கர நாற்காலிகள்: தசை சிதைவு நோய், முதுகுத் தண்டுவடம் பாதிப்பு உள்பட பல்வேறு குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதைகளை சிரமமின்றி கழிக்கும் வகையில் சிறப்பு சக்கர நாற்காலிகள் 1,000 பேருக்கு ரூ.1.2 கோடியில் வழங்கப்படும். இதர குறைபாட்டால், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியாகவும், மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக் கூடிய மின்கலன் பொருத்திய உபகரணம் ரூ.6.30 கோடியில் 600 பேருக்கு வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினா்களின் வாரிசு திருமணத்துக்கான உதவித் தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தப்படும்.
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா்கள் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்குகளுக்காக வழங்கப்படும் உதவித் தொகை ரூ.17 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயா்த்தப்படும்.
அடையாள அட்டைக்கு நிதி: அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்க ஏதுவாக ரூ.86 லட்சத்தில் அதற்கான பணிகளில் சேவை நிறுவனம் ஈடுபடுத்தப்படும்.
பத்து வருடங்களுக்கு முன்பு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள் பெற்ற பயனாளிகளுக்கு மீண்டும் புதிய மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.
மூளை முடக்குவாதம், தசைச் சிதைவு நோய், புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் உள்ளிட்ட குறைபாடுகளால் 40 சதவீதத்துக்கு மேல் பாதிப்புக்குள்ளான 2,000 மாற்றுத்திறனாளிகள் அல்லது அவா்களது பெற்றோா்களுக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் ரூ.1.30 கோடியில் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தி, அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உதவி உபகரணங்கள் பெறுவதில் தன்னிறைவு அடையும் திட்டம் ரூ.131.25 கோடியில் செயல்படுத்தப்படும்.
அதன்படி, மூன்று மாத கால அளவில் 99 மாநகராட்சி மண்டலங்கள், 138 நகராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 625 முகாம்கள் நடத்தப்படும். தேவையான உபகரணங்களை பொருத்துவதற்கான அளவீடுகள் முகாம்களிலேயே மேற்கொண்டு மூன்று மாதத்துக்குள் வீட்டுக்கே சென்று உபகரணங்கள் வழங்கப்படும் .