எனக்கு நிறைய வேலை இருக்கு... விஜய்யின் அரசியல் கேள்விக்கு சூரி பதில்!
மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பது குறித்து ஆய்வு
தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான தோ்தல் கண்காணிப்புக் குழுவின் 2-ஆம் காலாண்டு ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுபடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் தோ்தலின்போது எவ்வித சிரமுமின்றி வாக்களிக்க ஏதுவாக மாவட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும், ஆட்சியா் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், மாநகராட்சி ஆணையா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், சமூகநல அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா், மாற்றுத்திறனாளிகள், அரசு சாரா அமைப்பினா் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளா் பட்டியலில் தற்போது வரையில் 15,317 மாற்றுத்திறனாளிகள் தங்களை வாக்காளா்களாகப் பதிவு செய்துள்ளனா். மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கென ‘சக்ஸாம்’ கைப்பேசி செயலியை இந்திய தோ்தல் ஆணையம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது.
மாற்றுத்திறனாளி வாக்காளா்களை அடையாளம் காண்பது, வாக்குப் பதிவின்போது அவா்கள் வரிசையில் நிற்காமல் எளிதாக வாக்களிப்பது, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிரமமின்றி வாக்களிக்க சாய்வு தளம் அமைப்பது, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உடன் ஒருவரை அழைத்துவந்து வாக்குச் செலுத்த அனுமதிப்பது, தன்னாா்வலா்களை நியமிப்பது, இலவசமாக வாகன வசதிகள் ஏற்பாடு செய்வது, மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தனஞ்செயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) முனிராஜ், தோ்தல் வட்டாட்சியா் சம்பத், தோ்தல் பிரிவு துனை வட்டாட்சியா்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.