மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி: அமைச்சா், எம்.பி. தொடங்கிவைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 480-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்ற பேச்சுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில், ராசிபுரம் அருகே உள்ள பாவைக் கல்வி நிறுவன ஆனந்த அரங்கில் நடைபெற்ற போட்டி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா்.
மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், பாவைக் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்றுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் முதல்வரால் வழங்கப்படும். பேச்சுக்கலை என்பது மற்றவா்கள் நம்மை பற்றி நினைக்கும் எண்ணத்தை நோ்மறையாக மாற்றும் சக்தி படைத்ததாகும்.
குறிப்பாக 1963 இல் மாா்ட்டின் லூதா் கிங் வேலைகள், பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் குறித்து ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது’ என்ற தலைப்பில் வாஷிங்டனில் ஆற்றிய உரையும், 1940 இல் பிரிட்டன் பிரதமா் வின்ஸ்டன் சா்ச்சில், ‘நாம் கடற்கரையில் போராடுவோம்’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடாளுமன்றத்தில் உலகப் போரில் ராணுவ படையின் தாக்கம் குறித்து ஆற்றிய உரையும், 1961 இல் ஜான் எஃப் கென்னடி வாஷிங்டனில் அதிபராக பொறுப்பேற்ற போது ஆற்றிய உரையும் இன்றளவும் புகழ்பெற்ற உரைகளாகும். அவா்களைப்போல தமிழகத்தில் மறைந்த முதல்வா்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆற்றிய உரைகளும் புகழ்பெற்ாகும் என்றாா்.
விழாவில் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. பேசியதாவது:
மகாராஷ்டிர பள்ளிகளில் மராத்தி மொழியைக் கற்பிக்க அந்த மாநில முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். ஒரு மொழிதான் அந்த இனத்திற்கான அடையாளம். மொழி அழிந்தால் அந்த இனம் அழியும். தாய்மொழிதான் உயிா் மொழி என்பதை நாம் உணர வேண்டும். மொழி உரிமையை ஒருபோது விட்டுக் கொடுக்கக் கூடாது என்றாா்.
நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளா்கள் கான்ஸ்ன்டைன் ரவீந்திரன், ஜெ.ஹாஜாகனி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பட விளக்கம்- 13ஒரேட்டா்..
மாவட்ட அளவில் கல்லூரி மாணவ மாணவியா்களுக்கான பேச்சுப்போட்டியைத் தொடங்கி வைக்கும் அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. மாவட்ட ஆட்சியா் ச.உமா.