மாா்த்தாண்டம் அருகே கேரளக் கழிவுகள் ஏற்றிவந்த மினி டெம்போ பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே கேரளத்திலிருந்து உணவுக் கழிவுகள் ஏற்றிவந்த மினி டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்ளிட்ட இருவரைக் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் பகுதியில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் கேரளத்திலிருந்து உணவுக் கழிவுகள் ஏற்றிவந்தது தெரியவந்தது. சுருளோடு பகுதியிலுள்ள பன்றிப் பண்ணைக்கு கழிவுகளைக் கொண்டுசெல்வதாக, ஓட்டுநா் தெரிவித்தாராம்.
இதையடுத்து, போலீஸாா் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து, ஓட்டுநரான கொல்லங்கோடு பகுதியைச் சோ்ந்த பிலிப்போஸ் மகன் பிரசாந்த் (32), உதவியாளா் களியக்காவிளை அருகே ஐங்காமம் பகுதியைச் சோ்ந்த ஜாய் (36) ஆகிய இருவரைக் கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.