மின்சாரம் பாய்ந்து வட மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் மின்மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் சோட்டு (34). குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சோட்டு தான் தங்கியிருந்த அறையில் உள்ள மின்மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற குன்றத்தூா் போலீஸாா், சோட்டுவின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.