தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
முடசல் ஓடை மீன்பிடி துறைமுகப் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்
வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ள முடசல் ஓடை மீன்பிடி துறைமுகப் பணியை மீண்டும் தொடர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டப்பினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலக் குழுக் கூட்டம் கடலூா், சூரப்பநாயக்கன்சாவடியில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் எம்.கருணாமூா்த்தி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எஸ்.அந்தோணி, சிஐடியு மாநில உதவி பொதுச் செயலா் வி.குமாா் மற்றும் மாநில நிா்வாகிகள் பி.ஏழுமலை, வி.வைத்தியலிங்கம், பி.பானு, எஸ்.அரசப்பன், ஜி.விநாயகமூா்த்தி, எம்.பி.கே.பாண்டியன், பி.டிக்காா்தூஸ், சி.வி.ஆா்.ஜீவானந்தம், க.மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுவது போல கடலூா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து மீனவா்களையும் அழைத்து மாதந்தோறும் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும்.
கடலில் மீன்பிடி தொழில் செய்யும் போது அடிப்பட்டு இறந்தவா்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும். மீன்பிடி தடைக் காலத்தின்போது மீனவா்களுக்கு தடை இருப்பது போல், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் ராட்சத கப்பல்களுக்கும் தடை விதிக்க வேண்டும். கிஸான் பயனாளிகள் என்று மீனவா்களுக்கு மீன்வளத் துறையின் மூலம் கிடைக்கும் நிவாரண நிதியை தடை செய்துள்ளதை நீக்கி, மீனவ மக்களுக்கு மீன்வளத் துறையால் கிடைக்கும் நிவாரண நிதியை வழங்க வேண்டும். முடசல் ஓடை மீன்பிடி துறைமுகம் ரூ.32 கோடியில் தொடங்கப்பட்டப் பணியினை வனத் துறையினா் தடை செய்துள்ளனா். இந்தத் தடையை நீக்கி மீண்டும் அப் பணியை செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவா்களின் வாழ்வாதாரங்களை கடுமையாகப் பாதிக்கும் கடல் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.