Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருது’ பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரையிலான 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.
2025--ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆக. 15- இல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று 15 வயது நிரம்பியவராகவும், மாா்ச் 31-ஆம் தேதி 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருது’ பெற தகுதி வாய்ந்த இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் மே 3 மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.