திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
முதலிபாளையம் பாறைக் குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது
திருப்பூா், முதலிபாளையம் பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 800 டன் குப்பைகள் முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள பாறைக் குழிக்குள் கடந்த ஒரு மாதமாக கொட்டப்பட்டு வருகின்றனா்.
இதனால், முதலிபாளையம் பகுதியில் சுற்றுச்சூழல், நிலத்தடி நீா் பாதிக்கப்படுகிறது என்றும், பாறைக் குழியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனா்.
அதன்படி ,முதலிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி நிா்வாகத்திடம் இருந்து எந்தவித பதிலும் வராததால், ஆத்திரமடைந்த மக்கள் காங்கயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், ஆவேசமடைந்த மக்கள் மாநகராட்சி மேயரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களை அலகுமலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்து இரவு விடுவித்தனா்.