முதல் பாகத்தைத் தாண்டியதா? தேசிங்கு ராஜா - 2 திரை விமர்சனம்!
நடிகர் விமல் நடிப்பில் உருவான தேசிங்கு ராஜா - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தின் கதை என்ன? கதையே இல்லாத படம் என்றால் நம்ப முடிகிறதா? அப்படித்தான் இருக்கிறது தேசிங்கு ராஜா - 2. காவல்துறையில் பணியாற்றும் நடிகர் விமல் எம்ஜிஆர் காலத்தில் நாயகர்கள் அறிமுகமாகும் பாணியில் அறிமுகமாகிறார். இவர் ஒரு காவல் நிலையத்தின் ஆய்வாளர். மற்றொரு ஏரியா காவல் அதிகாரியாக குக் வித் கோமாளியில் பிரபலமான நடிகர் புகழ் பெண் வேடத்தில் நடித்துள்ளார். இருவருக்குள்ளும் யார் பெரிய ஆள் என்கிற போட்டி. அப்படியான சூழலில் அமைச்சர் மகனைக் காப்பாற்ற வேண்டும் என இடைவேளையில் சுமாராகக் கதை ஆரம்பிக்கிறது. பிறகு என்ன நடந்தது என்பதுதான் தேசிங்கு ராஜாவின் கதை.
இயக்குநர் எழிலின் படம்தான் என்பதை நம்ப முடியவில்லை. மிகத் திராபையான கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என படத்தைக் குறித்து நல்ல விதமாகச் சொல்ல ஒன்றும் இல்லை என்கிற அளவுக்கு மிக மிக சுமாரான படமாகவே திரைக்கு வந்திருக்கிறது.
தீபாவளி, மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் எழில். சாதாரண கதையாக இருந்தாலும் தன் படங்களில் நகைச்சுவைக் காட்சிகளைப் பலப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்துவிடுபவர். அப்படி அவர் உருவாக்கிய நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பேசப்படுகின்றன.
தேசிங்கு ராஜாவில் சூரி, ரவி மரியாவுக்கு இடையான நகைச்சுவைக் காட்சிகளை மறக்க முடியுமா? ஆனால், தேசிங்கு ராஜா இரண்டாம் பாகத்தை ஏதோ கடமைக்கு எடுத்ததுபோல் எடுத்தியிருக்கிறார். இறுதிவரை, சிரிப்பே வராத முழு நகைச்சுவைப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
ரவி மரியா, சிங்கம் புலி, புகழ், சாம்ஸ், மதுரை முத்து என தமிழ் சினிமாவில் பெயர்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் பலர் இப்படத்தில் இருந்தும் ஒருவராலும் ரசிகர்களைச் சிரிக்க வைக்க முடியவில்லை என்றால் எந்தளவுக்குக் காட்சிகள் இருந்திருக்கும்? ஒரே ஆறுதல் ஒரு ரௌடியின் வெட்டப்பட்ட தலையை வைத்து நகைச்சுவைக் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதை மட்டும் மெலிதாக சிரித்துப் பார்க்கப்படுகிறது. மற்றபடி மொத்தப் படமும் சலிப்பையே தருகிறது.
நடிகர் விமல் பல தோல்விப்படங்களுக்குப் பின் விலங்கு இணையத் தொடர் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார். போகுமிடம் வெகு தூரமில்லை படம் ஓடிடியில் கவனம் பெற்று விமலுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. ஆனால், தேசிங்கு ராஜா - 2 அவரை மீண்டும் பின்னுக்குத் தள்ளுகிறது.
கதாபாத்திரங்கள் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்கிற லாஜிக் கொஞ்சம் கூட இப்படத்தில் எழுதப்படவில்லை. விமல் ஒரு நாயகன் என்றால் இன்னொரு நடிகரும் நாயகனாக இருக்கிறார். இருவருக்கும் வலுவான காட்சிகளோ, கதையின் போக்கை மாற்றக்கூடிய தருணங்களோ எதுவும் இல்லை.
ஒளிப்பதிவாளர் செல்வாவின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. கலரிஸ்ட் பணிகளுடன் திரையில் பார்க்க காட்சிகளின் தரம் சிறப்பாக இருந்தாலும் காட்சி சரியில்லாததால் அவை பலத்தை இழக்கின்றன. வித்யா சாகர் இசையில் ஒரு பாடலும் மனதில் நிற்கவில்லை. சொல்லப்போனால், பாடல் வரும்போதெல்லாம் கை இயல்பாக செல்போனை தேடுகிறது.
இயக்குநர் எழில் இயக்கிய படங்களிலேயே இதுவே தரமற்ற படம். திரைப்படங்களுக்கு கதையும் திரைக்கதையும் முக்கியம் என பேசப்படும் காலத்தில் அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் காலாவதியான நகைச்சுவைகளை மட்டுமே நம்பி இப்படம் உருவாகியிருக்கிறது. தேசிங்கு ராஜா படத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முதல் பாகத்தின் பெயரைக் கெடுத்ததுபோல் ஆகிவிட்டதுதான் மிச்சம்!
actor vemal's desingu raja - 2 movie review. movie released today in theatres.