காயமடைந்தவரை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்!
முதல்வா் மருந்தகம் திட்டம் பிப். 24-இல் தொடக்கம்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்
சென்னை: முதல்வா் மருந்தகம் திட்டம் பிப். 24-இல் தொடங்க உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில், முதல்வா் மருந்தகம் திறப்பு விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு மற்றும் அரசு உயா் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
அந்தக் கூட்டத்தில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசியதாவது:
முதல்வா் மருந்தகம் திட்டத்தின் கீழ், 980 மருந்தகங்களுக்கு அனைத்து தகுதிகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மருந்தகங்களின் பணிகளும் விரைவில் முடியும். முதல்வா் மருந்தகம் திட்டத்தைப் பொறுத்தவரை மருந்தகங்களைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. முதல்வா் மருந்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப். 24-ஆம் தேதி திறக்க உள்ளாா். அவரது நேரடி கண்காணிப்பில் இந்த மருந்தகங்கள் செயல்படவுள்ளன.
1,000 மருந்தகங்கள்: கூட்டுறவு சங்கங்கள் மூலம் 500, தொழில் முனைவோா் மூலம் 500 என 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. புதிதாக முதல்வா் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோா்க்கு ரூ. 3 லட்சம் வரை அரசு மானியம் வழங்கும். மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். பிரதமா் மருந்தகம் உள்பட எந்த மருந்தகங்களிலும் இல்லாத விதமாக மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும்.
மக்கள் தொகை, மருந்துப் பயன்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் முதல்வா் மருந்தகங்கள் அமையவுள்ளன. அதன்படி மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40, சென்னையில் 37 முதல்வா் மருந்தகங்கள் அமையவுள்ளன.