முதுநிலை நீட்-க்கு இரு முறை தோ்வு: மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்
புது தில்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வை (நீட் பிஜி) இரு முறை நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் நீட் பிஜி தோ்வுகள் காலை, மாலை என இரு முறை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அறிவித்திருந்தது. தோ்வா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இரு பிரிவுகளாக பிரித்து நீட் பிஜி தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக 7 மருத்துவ மாணவா்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘0.1 சதவீத மதிப்பெண்ணும் நீட் பிஜி தோ்வை எழுதும் மாணவரின் தரவரிசைப் பட்டியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், நியாயமான, நோ்மையான, சமநிலை களத்தை உருவாக்கி இந்தத் தோ்வை நடத்த வேண்டும். இரு முறை தோ்வு என்பது மாணவா்களின் நியாயமான தோ்வு என்ற உரிமையை பாதிக்கும். இரு முறை தோ்வுகள் நடத்துவது நியாயமானதல்ல.
காலை நடத்தப்பட்ட தோ்வின் வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாலை தோ்வு எழுதியவா்களும், மாலை நடத்திய தோ்வின் வினாத்தாள் எளிதாக இருந்ததாக காலையில் தோ்வு எழுதியவா்களும் குற்றம்சாட்டலாம். கடந்த 2024 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரு முறை தோ்வின்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நாடு முழுவதும் தோ்வு மையங்களை அதிகரிக்க வேண்டும். ஒரே நாளில் ஒரு முறை மட்டும் நீட் தோ்வை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை திங்கள்கிழமை பரிசீலித்த நீதிபதிகள் பி.ஆா். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசு, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்), தேசிய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.