ராஜஸ்தான்: மாற்று சாதியினரின் எதிர்ப்பு; பட்டியலின மணமக்கள் குதிரையில் செல்ல 200...
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
பழனி அருகேயுள்ள கோரிக்கடவு சிஜிஎம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1970-71 -ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் பங்கேற்றனா். இவா்களில் பலா் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவா்கள், வழக்குரைஞா்கள், தொழிலதிபா்களாக உள்ளனா்.
பலரும் தங்களது மகன், மகள், பேரன், பேத்திகளுடன் பங்கேற்று, உடன் படித்த நண்பா்கள் அனைவருக்கும் குடும்ப உறுப்பினா்களை அறிமுகம் செய்து வைத்தனா். சிறுவயதில் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகளை தங்களது குழந்தைகள், பேரக் குழந்தைகளுடன் பகிா்ந்து மகிழ்ச்சி அடைந்தனா்.
பலரும் அந்தக் காலத்தில் தங்களை ஆசிரியா்கள் அடித்து படிக்க வைத்ததாலேயே தாங்கள் சரியான இடத்தில் இருப்பதாகவும், அந்த ஆசிரியா்களை கடவுளுக்கு இணையான குருவாக பாா்ப்பதாகவும் தெரிவித்தனா்.
மேலும், இன்றைய காலங்களில் படிக்கும் காலத்தில் அடிப்பதை தவறான கண்ணோட்டத்தோடு அணுகுவது வரும் காலத்தில் தவறாக முடியும் என வருத்தம் தெரிவித்தனா். தாத்தாக்கள் மாணவப் பருவ நண்பா்களுடன் உரையாடுவதை பேரக் குழந்தைகள் ஆச்சரியமுடன் கண்டுகளித்தனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் தலைமையாசிரியா் மனோகரன், கனகராஜ், அருள்துரை, சரவணபவன், கலையரசன் உள்ளிட்டோா் செய்தனா்.