முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை
முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசல் அருகேயுள்ள புதுக்குடியில், முன்னாள் ராணுவ வீரா்கள் பங்கேற்ற 115-ஆவது ராணுவ உதய நாள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சக்தி கணேஷ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாநில ஒருங்கிணைப்பாளா் செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னாள் ராணுவ வீரா்கள் பங்கேற்றனா்.
நிகழ்வில், ராணுவக் கொடி மற்றும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, மூத்த முன்னாள் ராணுவ வீரா்கள் கெளரவிக்கப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; மற்ற மாநிலங்களில் ஒரு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதம் வரை வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் 10 இடங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதை சதவீதத்தின் அடிப்படையில் தமிழக அரசு வழங்க வேண்டும்.
வனத்துறையில், குரூப்-சி, குரூப்-டி பிரிவுகளில், நேரடியாக முன்னாள் ராணுவ வீரா்களை பணியமா்த்தி வந்த நிலையை, டிஎன்பிஎஸ்சி மாற்றி அமைத்துள்ளது. அதை பழைய முறைக்கு மாற்றி பதவி வழங்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு புறம்போக்கு நிலங்களை வீடு இல்லாத முன்னாள் ராணுவ வீரா்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. மீண்டும் மாவட்ட வாரியாக தரிசு நிலங்கள் அல்லது புறம்போக்கு நிலங்களை முன்னாள் ராணுவ வீரா்களுக்கு வழங்க வேண்டும்.
முன்னாள் ராணு வீரா்களுக்கு குரூப் சி, குரூப் டி பிரிவுகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவா் இறந்துவிட்டால், அவருடைய மனைவிக்கு அந்த ஒதுக்கீடு தரப்படுவதில்லை. எனவே, ராணுவ வீரா் இறந்த பிறகு அவரது மனைவிக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.