டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!
மும்பை: குடிபோதையில் தகராறு; இரு குடும்பத்தினர் மோதிக்கொண்டதில் 3 பேர் படுகொலை
மும்பை தகிசர் கண்பத் நகர் குடிசைப்பகுதியில் வசித்தவர் ஹமித் ஷேக்(49). இவரது வீட்டிற்கு அருகில் ராம் குப்தா(50) என்பவர் வசித்து வந்தார்.
இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
ராம் குப்தா அப்பகுதியில் தேங்காய் கடை நடத்தி வந்தார். அவரது கடை வழியாக ஹமித் ஷேக் குடிபோதையில் சென்றார். அப்போது அவர் குடிபோதையில் ராம் குப்தாவிடம் ஏதோ பேசி வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் தங்களது மகன்களுக்கு போன் செய்து வரவழைத்தனர்.
எனவே ராம் குப்தாவின் மகன் அமர், அர்விந்த், அமித் ஆகியோர் ஆயுதங்களுடன் வந்தனர். ஹமித் ஷேக்கின் இரண்டு மகன்களும் வந்தனர்.
இரு தரப்பினரும் தெருவில் கடுமையாக மோதிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இத்தாக்குதலில் ராம் குப்தா மற்றும் அவரது மகன் அர்விந்த் ஆகியோர் உயிரிழந்தனர். எதிர் தரப்பில் ஹமித் ஷேக் உயிரிழந்தார்.

இருவரது மகன்களும் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மூவரது உடல்களையும் மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். சம்பவ இடத்தில் மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் இருப்பதால் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். இம்மோதலில் இரு குடும்பத்தில் இருந்து 10 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்