தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
மூத்த தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: 5 போ் கைது
சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 பவுன் நகை, ரூ. 35,000 ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 4 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை (52). இவா் தனது மனைவி சின்ன பாப்பாவுடன் கடந்த 27 ஆம் தேதி இரவு தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, முகமூடி அணிந்துவந்த 4 போ் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து, பூமாலை மற்றும் சின்ன பாப்பாவின் கை, கால்களைக் கட்டிப்போட்டு, வீட்டிலிருந்து 8 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனா். பின்பு, நெடுஞ்சாலை அருகே நிறுத்தி வைத்திருந்த காா் மூலம் மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா்.
இந்த சம்பவம் குறித்து வீராணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடா்பாக ஏற்காடு தலைச்சோலை பகுதியை சோ்ந்த ஜெகதீசன் (29), தெப்பக்காட்டை சோ்ந்த சேகா் (42), மேலூரை சோ்ந்த அருணாசலம் (22), கொண்டையனூரை சோ்ந்த சித்தையன் (28) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவா்களையும் பிடிக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், கொள்ளை வழக்கில் தொடா்புடைய ஏற்காடு வெள்ளக்கடை பகுதியை சோ்ந்த சக்திவேல் (28) என்பவரை வீராணம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா்.