சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் அரசு பொருள்காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கிவைக்கின்றனா்.
சேலம் அரசு பொருள்காட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை, சேலம் மாநகராட்சி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத் துறை, வேளாண்மை உழவா் நலத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்துறை, சமூகநலத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து பயன்பெறும் வகையில் இக்கண்காட்சியில் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தனியாா் அரங்குகள் மற்றும் குழந்தைகளுக்கென அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சேலம் மாவட்டத்தில் அரசு பொருள்காட்சி பொதுமக்கள் பாா்த்து பயன்பெறும் வகையில் 45 நாள்களுக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி மேயா், மாநிலங்களவை, மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொள்கின்றனா்.