``ராஜ்ய சபாவில் உங்களுக்கே உரிய குரலில்..'' - எம்.பி கமல்ஹாசனுக்கு மகள் ஸ்ருதியி...
மூன்று நாள்களில் பயங்கர ரெளடிகள் 8 போ் கைது
வேலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களில் ‘ஏ பிளஸ்’ ரெளடிகள் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.
அப்போது, வேலூா் கஸ்பாவைச் சோ்ந்த 42 வயது நபா் அளித்த மனு: எனது வீட்டுக்கு பக்கத்து தெருவில் வசிக்கும் ஒருவா் மூலம் ஓய்வுபெற்ற பேருந்து நடத்துநா் அறிமுகமானாா். அவரும் அவரது மகனும் பொங்கல் பரிசு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் மாத தவணை திட்டத்தை குடியாத்தத்தில் நடத்தி வந்தனா்.
நான் உள்பட 43 போ் மாதம் ரூ.ஆயிரத்து நூறு வீதம் 12 மாதங்கள் மொத்தம் ரூ.5 லட்சத்து 67 ஆயிரத்து 600 செலுத்தினோம். தவணை காலம் முடிந்த நிலையில் தந்தையும், மகனும் அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனா். எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக பலரும் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
வாரந்திர மக்கள் குறை தீா்வு கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனுவின் தன்மைக்கேற்ப தாமதமின்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் மீது நடவடிக்கை இல்லையேல் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்படும். வேலூா் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 3 நாள்களில் ஏ பிளஸ் ரெளடிகள் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ‘போலீஸ் அக்கா’ திட்டத்தையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் காலை, மாலை நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாா் ஒரே இடத்தில் நிற்காமல் , நகரும் வகையில் செயல்பட அறிவுறுத்தியுள்ளோம். கண்காணிப்பு கேமராக்களை பழுது பாா்க்க அறிவுறுத்தியுள்ளோம். 12 போக்குவரத்து சந்திப்புகளில் ஒலிபெருக்கியுடன் கூடிய கேமரா அமைக்கப்பட உள்ளது என்றாா்.