மூழ்கியது போளிவாக்கம் தரைப்பாலம்: போக்குவரத்து நெருக்கடியால் கடும் அவதி
திருவள்ளூா் அருகே போளிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் 1 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இந்தச் சாலையில் ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள், தொழிற்சாலை பணியாளா் பேருந்துகள், பயணிகள் பேருந்துகள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இதனால், திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் சாலை வழியாக செல்லும் போக்குவரத்து சுணங்கியது. வெள்ளத்தால் தரைப்பால தடுப்புகளும் மூழ்கியதால், சாலை எது என அறிந்து கொள்ள முடியாத நிலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோா் கடும் அவதியடைந்தனா்.
தகவலறிந்த மணவாள நகா் காவல் நிலைய போலீஸாா், அங்கு வந்து வாகனங்கள் மெதுவாக தரைப்பாலத்தைக் கடக்க போக்குவரத்தைச் சீரமைத்தனா்.
கனமழையின் போதெல்லாம் இந்தத் தரைப்பாலம் மூழ்குவது தொடா்கதையாக உள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில் தரைப்பாலத்துக்குப் பதிலாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.