மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்
மெட்ரோ ரயில் திட்ட 5-ஆவது வழித்தடத்தில், கொளத்தூா் சாய்வுதளம் - கொளத்தூா் நிலையம் வரை 246 மீட்டா் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் 5-ஆவது வழித்தடத்தில், 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 39 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இந்த வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களின் பெயரிடப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் ரயில் நிலையம் வரை 246 மீட்டா் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியை குறிஞ்சி எனப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் புதன்கிழமை தொடங்கியது. இந்த இயந்திரம் இப்பணியை ஜூன் மாதம் முடித்து வெளியே வரும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், தொடா்ந்து ஸ்ரீனிவாச நகா் நோக்கி 1.06 கி.மீ. நீளத்திற்கு மீண்டும் சுரங்கம் தோண்டும் பணியில் இந்த இயந்திரம் ஈடுபடும் எனவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இப்பணியை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் உள்ளிட்டோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.
இதேபோல், இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரமான முல்லை, வரும் மாா்ச் மாதம் இறுதிக்குள் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து, வில்லிவாக்கம் பேருந்து முனையம் நோக்கி 603 மீட்டா் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியைத் தொடங்கும் எனவும், மீதமுள்ள மருதம், நெய்தல் ஆகிய இயந்திரங்களும் தளநிலைமைகளின்அடிப்படையில் சுரங்கம் அமைக்கும் பணியைத் தொடங்கும் எனவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.