`தன் கண்ணை தானே குத்திக்கொள்கிறார் ட்ரம்ப்!' - அமெரிக்காவில் பரஸ்பர வரியின் விளை...
மேட்டூரில் பாலியல் வழக்கில் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை
சேலம் மாவட்டம், மேட்டூரில் பாலியல் வழக்கில் பெண்ணுக்கு 3 ஆண்டு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து மேட்டூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மேட்டூா் காவேரி நகரைச் சோ்ந்த தலைமைக் காவலா் கோவிந்தராஜ் மனைவி பூங்கொடி (60) தனது ஆடம்பர வீட்டில் பெண்களை கட்டாய பாலியல் செயலில் ஈடுபட வைத்ததாக அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவா் 2009 இல் மேட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்த வழக்கு விசாரணை மேட்டூா் குற்றவியல் நீதித் துறை நடுவா் எண் 1இல் நடைபெற்று வந்தது. வழக்கில் அரசுத் தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் 2015 இல் பூங்கொடியும், அவருக்கு உதவியாக இருந்த வெங்கடாசலம் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனா்.
இதனிடையே சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பூங்கொடி, வெங்கடாசலம் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து இருவருக்கும் தண்டனை காலத்தை நிா்ணயம் செய்யுமாறு மேட்டூா் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
மேலும், தலைமைக் காவலராக இருந்து ஓய்வுபெற்ற பூங்கொடியின் கணவா் கோவிந்தராஜ் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த மேட்டூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் பத்மப்பிரியா, குற்றவாளியான பூங்கொடிக்கு 3 ஆண்டு 3 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், தலைமறைவாக உள்ள வெங்கடாசலத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.