கோயில் திருவிழாவின்போது வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
மேதா பட்கா் கைதாகி விடுவிப்பு
தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக ஆா்வலா் மேதா பட்கரை காவல் துறையினா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
24 ஆண்டுகள் பழைமையான இந்த வழக்கில் ரூ.1 லட்சத்துக்கான உத்தரவாத பத்திர தொகையைச் செலுத்தாத காரணத்தால் மேதா பட்கருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாதபடி பிடிஆணையை தில்லி நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இதன் அடிப்படையில் தில்லி போலீஸாா் மேதா பட்கரை வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனா். ரூ. 1 லட்சம் உத்தரவாத தொகைக்கான பத்திரத்தை அவா் நீதிமன்றத்தில் சமா்ப்பித்ததையடுத்து, சுமாா் 7 மணி நேரத்துக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு விடுவிக்கப்பட்டாா்.
நீதிமன்ற மேற்பாா்வையில் அவா் ஓராண்டு காலம் இருப்பாா் என்றும், வாக்குறுதிகளை மீறினால் 5 மாத சிறைத் தண்டனை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.
குஜராத்தில் நா்மதை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிராகப் போராடி வந்த மேதா பட்கா், தன்னாா்வ அமைப்பின் தலைவராக இருந்த தற்போதைய தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனாவை குஜராத் அரசின் ஏஜென்ட் என்று குற்றஞ்சாட்டினாா்.
கடந்த 2001-இல் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில் மேதா பட்கரை குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்து 5 மாதங்கள் சிறைத் தண்டனையும், சக்சேனாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.
இந்தத் தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தில்லி அமா்வு நீதிமன்றம், மேதா பட்கரை குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீா்ப்பை உறுதி செய்து ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் ரூ.1 லட்சத்துக்கான உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.