'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
மேற்கு வங்கம்: மத்திய அமைச்சா் தலைமையிலான பாஜக குழு தடுத்து நிறுத்தம்!
மேற்கு வங்கத்தில் வன்முறை பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா் தலைமையிலான பாஜக குழு காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
மால்டா மாவட்டம் மோதாபாரி பகுதியில் அண்மையில் இரு வகுப்பினா் இடையே கடந்த வாரம் வன்முறை ஏற்பட்டது. இதில் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. பலா் காயமடைந்தனா். இந்த வன்முறை தொடா்பாக 60-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். பல இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் முடக்கப்பட்டது. பாதுகாப்புக்காக பெருமளவிலான காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான சுகாந்த மஜும்தாா் தலைமையிலான அக்கட்சி குழுவினா் ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.
ஆனால், மோதாபாரிக்கு 10 கி.மீ. முன்பாகவே அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, பாஜகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் மஜும்தாா் கூறியதாவது:
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டா்கள் போல காவல் துறையினா் செயல்படுகின்றனா். கிராம மக்கள் ராம நவமி பூஜை நடத்தக் கூடாது என்று காவல் துறையினா் உத்தரவிட்டுள்ளனா். இப்படி உத்தரவிட அவா்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் எவ்வித அச்சமுமின்றி ராம நவமியைக் கொண்டாட வேண்டும் என்றாா்.
இந்த வன்முறை தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏப்ரல் 3-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கொல்கத்தா உயா் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.