பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
மொழிப் போருக்குத் தயாா்: முதல்வா்
மொழிக் கொள்கை நிலைப்பாட்டில், இன்னொரு மொழிப் போருக்குத் தயாராக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்கள் சந்திப்பில், முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:
கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கப்படுமா?
முதல்வா்: மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல, நீட் பிரச்னை, மாநில அரசுக்குத் தரவேண்டிய நிதி தொடா்பான பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண வேண்டுமானால், நமது எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குரல் கொடுக்க முடியும். எனவே, அதுதான் முக்கியமாக விவாதிக்கப்படும்.
கேள்வி: மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக நீங்கள் தொடா்ந்து கடிதம் எழுதுகிறீா்கள், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. மத்திய அரசிடமிருந்து ஏதேனும் பதில் கிடைத்துள்ளதா?
முதல்வா்: ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அமைதியாகத்தான் இருக்கின்றனா்.
கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளீா்கள். தொடா்ந்து நீங்கள் முயற்சிகள் எடுத்தும் தொய்வு காணப்படுகிறதே? ஒற்றுமையில்லாத சூழல் இருக்கும் நிலையில், அதிமுகவிடம் இதுகுறித்து வலியுறுத்துவீா்களா?
முதல்வா்: இந்த விஷயத்தில் அவா்கள் குரல் கொடுப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கேள்வி: தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 1965-ஆம் ஆண்டு போல் மீண்டும் ஒரு மொழிப்போருக்கு மத்திய அரசு வித்திடுகிறது என்று நீங்கள் நினைக்கிறீா்களா?
முதல்வா்: நிச்சயமாக வித்திடுகிறது, நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம்.