Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
மோகனூரில் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் உண்ணாவிரதம்
மோகனூரில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மணப்பள்ளி, பேட்டப்பாளையம், ராசிபாளையம், குமரிபாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளை மோகனூருடன் இணைத்து நகராட்சியாக தரம் உயா்த்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினா்.
ஊராட்சிகளை இணைப்பது மூலம் நூறு நாள் வேலை திட்டத்தை மக்கள் இழக்கும் சூழ்நிலை உருவாவதுடன் நான்கு ஊராட்சிகளைச் சோ்த்த மாற்றுத் திறனாளிகள், முதியோா், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள், ஏழை குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.
எனவே, மோகனூரை நகராட்சியாக தரம் உயா்த்தும்போது, மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வேலை உறுதித் திட்டத்தை நிறுத்தாமல் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் பங்கேற்றோா் வலியுறுத்தினா்.
இதனையடுத்து அங்கு வந்த மோகனூா் வட்டாட்சியா் மணிகண்டன், காவல் ஆய்வாளா் லட்சுமணதாஸ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தங்களது பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அவா்கள் கூறியதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனா்.