மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்லவுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமையவுள்ளது. எனினும் முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
முதல்வர் போட்டியில், அரவிந்த கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், மாநில பாஜக தலை வீரேந்திர சச்தேவா, சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்கரி ஸ்வராஜ் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோர் உள்ளனர்.
தில்லியில் பாஜக தலைமையில் அமையவுள்ள ஆட்சியில் முதல்வர் இருக்கையில் அமரவுள்ளது யார் என்பது குறித்து உயர்மட்டத் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்து இன்று மாலை ஆலோசித்தார்.
பாஜக விரைவில் அதன் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய முதல்வரைத் தேர்வு செய்யவுள்ளது. இதன் பிறகு முதல்வர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தில்லி முதல்வர் பதவியேற்பு விழாவானது, பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்துக்குப் பிறகு நடைபெறும் எனத் தெரிகிறது.
பிப். 12, 13 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். இரண்டாவது முறை அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றப் பின் மோடி மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும். இதனால் இந்தப் பயணத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!