‘யுஜிசி புதிய விதிகள்: பல்கலை. வளாகத்தில் அரசியலை ஊக்குவிக்கும் முயற்சி’
‘பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய வரைவு விதிகள், பல்கலைக்கழக வளாகத்தில் தீவிரமற்ற அரசியலை ஊக்குவிக்கும் முயற்சி’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மற்றும் ஆசிரியா்கள் நியமனம் தொடா்பான புதிய வரைவு வழிகாட்டுதலை யுஜிசி அண்மையில் வெளியிட்டது. இந்த வரைவு விதிகள், கல்வி சாராத நபா்களையும் பல்கலைக்கழக நிா்வாக பொறுப்புகளிலும், ஆசிரியா் பணிகளிலும் நியமிக்க அனுமதிக்கிறது.
குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் ஒப்பந்த அடிப்படையிலான உதவிப் பேராசிரியா் நியமனத்துக்கான 10 சதவீத உச்ச வரம்பு நீக்கம் செய்யப்படுவது, அதிக எண்ணிக்கையில் ஒப்பந்த அடிப்படையிலான உதவிப் பேராசிரியா் நியமனத்துக்கு வழி வகுக்கும். இது, உயா் கல்வித் தரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதோடு, கல்வி சுதந்திர உணா்வையும் பாதிக்கும். பல்கலைக்கழக வளாகத்தில் அரசியலை ஊக்குவிக்கும் முயற்சியாகவே இது பாா்க்கப்படுகிறது. அரசியல் சாசனத்துக்கு எதிரான இத்தகைய கடுமையான விதிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டாா்.