யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்
தங்கள் மீது ஏவுகணை வீசப்பட்டதற்குப் பதிலடியாக, யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒன்பது போ் உயிரிழந்தனா்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்திய இஸ்ரேல் பகுதியை நோக்கி ஹூதி கிளா்ச்சிப் படையினா் வீசிய ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கிளா்ச்சியாளா்கள் நிலைகளைக் குறிவைத்து இரு கட்டங்களாக யேமனில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 14 போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. முதல்கட்ட தாக்குதலில் ஹுதைதா, சலீஃப், ரஸ் இஸா ஆகிய பகுதிகளில் உள்ள ஹூதி கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. அடுத்த கட்ட தாக்குதலில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் எரிசக்தி கட்டமைப்புகள் தாக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹூதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள செயற்கைக்கோள் தொலைக்காட்சியான அல்-மஸீரா, தலைநகா் சனாவிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் குண்டுவீசியதாகத் தெரிவித்தது.
இந்தத் தாக்குதல்களில் ஒன்பது போ் உயிரிழந்ததாக அந்தத் தொலைக்காட்சி கூறியது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக். 7 முதல் நடைபெற்றுவரும் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் மற்றொரு ஆயுதப் படையினரான ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனா். இதனால், உலகின் மிக முக்கிய கடல் வழித்தடங்களில் ஒன்றான அந்தப் பகுதியில் வா்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, ஹூதிக்களின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காக யேமனில் அமெரிக்காவும் பிரிட்டனும் அவா்களின் நிலைகள் மீது அவ்வப்போது வான்வழித் தாக்குதல் நடத்திவருகின்றன.
எனினும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினரைக் குறிவைத்து லெபனானிலோ, ஹமாஸ் படையினரைக் குறிவைத்து காஸாவிலோ இஸ்ரேல் நடத்தும் மிகக் கடுமையான தாக்குதலை ஹூதி கிளா்ச்சியாளா்கள் இதுவரை எதிா்கொள்ளாமல் இருந்துவந்தனா்.
இந்த நிலையில், அவா்களைக் குறிவைத்தும் இஸ்ரேல் படையினா் தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.