ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை! 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்!
ரயிலில் இருந்து அக்னி - பிரைம் ஏவுகணையை ஏவி இந்திய ராணுவம் புதன்கிழமை இரவு நடத்திய சோதனை வெற்றி அடைந்துள்ளது.
இந்த ஏவுகணை, சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைக்கும் உள்நாட்டு அக்னி ஏவுகணைகள், கடந்த 2011 முதல் பயன்பாட்டில் இருக்கின்றது. தொடர்ந்து அடுத்த தலைமுறை ஏவுகணைகளை டிஆர்டிஓ வடிவமைத்து வருகின்றது.
இந்தியாவிடம் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளில் அக்னி - பிரைம் மிகவும் முக்கியமானது. இந்த வகை ஏவுகணைகள் 5,000 கி.மீ. தொலைவு வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது.
இந்த நிலையில், 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும் அக்னி - பிரைம் ஏவுகணையை முதல்முறையாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலில் வைத்து, நேற்றிரவு ஏவி சோதனை டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது.
இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், ஏவுகணை சோதனை செய்யப்பட்ட காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பதாவது:
“ரயிலில் அமைக்கப்பட்ட மொபைல் லாஞ்சர் அமைப்பிலிருந்து அக்னி-பிரைம் ஏவுகணையை முதல்முறையாக இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த ஏவுகணை 2,000 கி.மீ., வரையிலான தொலைவை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு ரயில் லாஞ்சர் மூலம், எவ்வித தடையுமின்றி எந்த பகுதிக்கும் கொண்டு செல்ல முடியும். தெரிவுநிலை குறைந்த பகுதியிலும், குறுகிய நேரத்தில் எதிர்வினையாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
India has carried out the successful launch of Intermediate Range Agni-Prime Missile from a Rail based Mobile launcher system. This next generation missile is designed to cover a range up to 2000 km and is equipped with various advanced features.
— Rajnath Singh (@rajnathsingh) September 25, 2025
The first-of-its-kind launch… pic.twitter.com/00GpGSNOeE
இந்த சாதனையைப் படைத்த டிஆர்டிஓ மற்றும் ஆயுதப் படைகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிகரமான சோதனையானது, நகரும் ரயில் ஏவுதளத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.