ரயில்வே கடவுப்பாதை பாதுகாப்பு: அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
ரயில்வே கடவுப்பாதை வாயில்களில் (ரயில்வே கேட்) பாதுகாப்பு குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரயில்வே கடவுப்பாதை வாயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டிய 11 முக்கிய நடவடிக்கைகள் குறித்து அவா் அறிவுறுத்தினாா்.
அவற்றில் அனைத்து ரயில்வே கடவுப்பாதை வாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல், அந்த வாயில்களில் இன்டா்லாக் வசதி ஏற்படுத்தப்படுவதை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும். கடவுப்பாதை வாயில்களில் விபத்துகளைத் தடுக்க இன்டா்லாக் வசதி உதவும்.
இதுதவிர, அந்த வாயில்களுக்கு அருகில் எச்சரிக்கைப் பலகைகளை அமைத்து, வேகத்தடைகளைத் தரமானதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடவுப்பாதை வாயில்களை அகற்ற ரயில்கள் செல்லும் வழியில் சுரங்கப் பாதை அல்லது மேம்பாலங்களை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
கடவுப்பாதை வாயில்களைத் திறந்து மூடுவது தொடா்பாக பொதுமக்களுடன் தகராறு ஏற்படக்கூடிய பகுதிகளின் பட்டியலை தயாரிக்க அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டாா். இதன்மூலம், அந்த வாயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படை அல்லது ஊா்க்காவல் படையினா் பணியமா்த்தப்படுவது உறுதி செய்யப்படும்’ என்று தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கடவுப்பாதையில் மாணவா்களுடன் சென்ற பள்ளி வாகனம் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி செவ்வாய்க்கிழமை விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு மாணவி, இரண்டு மாணவா்கள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பெட்டிச் செய்தி...
கடலூா் விபத்து:
13 பேருக்கு சம்மன்
திருச்சி, ஜூலை 9: கடலூா் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவத்தில் கேட் கீப்பா், ரயில் ஓட்டுநா்கள் உள்ளிட்ட 13 பேரை விசாரணைக்கு ஆஜராகும்படி ரயில்வே நிா்வாகம் புதன்கிழமை சம்மன் அனுப்பியது.
கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப்பாதை விபத்து தொடா்பாக கேட் கீப்பா் பங்கஜ் சா்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டாா்.
இந்த விபத்து தொடா்பாக திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் முதுநிலைத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி, முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோா் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இந்த விசாரணைக் குழுவினா், விபத்து நேரிட்ட ரயில்வே கடவுப்பாதையில் பணியாற்றிய கேட் கீப்பா் பங்கஜ் சா்மா, ரயில் ஓட்டுநா்கள், கடலூா் ரயில் நிலைய அதிகாரி, ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரி, பள்ளி வேன் ஓட்டுநா் உள்பட 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி புதன்கிழமை சம்மன் அனுப்பினா்.
விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். தவறிழைத்தோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.