தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை
ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்
ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபருடன் டிரம்ப் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனையில், பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் பிரைடுரிச் மெர்ஸ், பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வோன் டெர் லெயென், நேட்டோ கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இருவரும் விரைவில் நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள், பின்னர், நான் கலந்துகொள்ளும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களுடன் ஸெலன்ஸ்கி பேசியதாவது:
”புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை. முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருப்பதை தெரிவித்துள்ளோம்.
அமெரிக்க அதிபரிடம் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ரஷியா முன்மொழிந்தால் நாங்களும் தயாராக இருக்கிறோம். அதன் முடிவைத் தொடர்ந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அமைதிக்கான பாதைக்கு உக்ரைன் எப்போதும் தடங்கலாக இருக்காது. தலைவர்கள் மத்தியிலான அனைத்து பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.