ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்
நிறம் மாறும் சூப்பர்ஹீரோ படங்கள்; சூப்பர்மேன் பேசிய இஸ்ரேல்- பாலஸ்தீன் அரசியல் எவ்வளவு முக்கியமானது?
மார்வெல்லுடன் சண்டை செய்யும் டிசி யுனிவர்ஸுக்குப் புது நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது ஜேம்ஸ் கன் இயக்கியிருக்கும் 'சூப்பர்மேன்' ரீ-பூட்.
கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலரை நெருங்கிக்கொண்டிருக்கிறது வசூல்! எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருந்தது, இந்தப் படத்துக்கு பாசிட்டிவாக க்ளிக்காகியிருக்கிறது என்பதுதான் விமர்சகர்களின் பார்வை!

இந்தக் கட்டுரையின் விஷயம் அதுவல்ல... புதிய சூப்பர்மேனோ, மற்ற சூப்பர் ஹீரோக்களின் கேமியோவோ, சண்டைக் காட்சிகளோ, அல்லது காமிக்ஸுடன் ஒத்துப்போகும் அம்சங்களோ ஈர்க்காத அளவு இந்தப் படத்தில் ஈர்த்த விஷயம் இஸ்ரேல் - பாலஸ்தீன் போரை மையமாகக்கொண்டு வரும் காட்சிகள்தான்!
சூப்பர்மேனுக்கு அறிமுகம் தேவையில்லை. அதேபோல்தான் இஸ்ரேல் - பாலஸ்தீன் போரும்! அதனால் படத்தில் இந்த அறிமுகங்களில் நேரத்தைக் கழிக்காமல், நேராக சூப்பர்மேன் சந்திக்கும் பிரச்னைக்குச் சென்றார்கள்.
சூப்பர்மேன் ஒரு போரைத் தடுத்துள்ளார். இது பொரேவியா என்னும் நாடு ஜார்ஹான்பூர் என்னும் நாட்டை ஆக்கிரமிக்க நடத்தும் போர். அதற்கு அமெரிக்காவிலிருக்கும் கற்பனை நகரமாகச் சித்திரிக்கப்படும் மெட்ரோபோலிஸிலிருந்து பொரேவியாவிற்கு போர்க்கால உதவிகள் செல்கின்றன.
எங்கோ கேட்டது போல் உள்ளதா? ஆம், அதே இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னைதான்!

சூப்பர்மேன் ஜார்ஹான்பூருக்கு (பாலஸ்தீன்) ஆதரவாகச் செயல்பட்டு போரை நிறுத்தியது தவறு எனக் கண்டனங்கள் எழுகின்றன.
ஒரு தனி மனிதனால் இது சாத்தியமாகக் கூடாது என அரசாங்கம் கூறுகிறது. சூப்பர்மேனின் காதலி லோயிஸ் லேன் ஒரு வாக்குவாதத்தில், "சூப்பர்மேன் எப்படி ஒரு தரப்பினர் நல்லவர்கள் என முடிவு செய்ய முடியும்? உங்களின் செயலால் ஒரு சர்வாதிகாரியின் இடத்தில் இன்னொரு சர்வாதிகாரி வந்தால்?" என்ற கேள்வியை எழுப்புகிறார்.
அதற்கு சூப்பர்மேன் உக்கிரமாகக் கூறிய பதிலே அழிந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்போர் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டியது!
படத்தின் முக்கிய வில்லன் லெக்ஸ் லூத்தர். சூப்பர்மேனுக்கும் அவருக்கு இருக்கும் பல பிரச்னைகளில் ஒன்று அவர் தடுத்த இந்தப் போர்!
லூத்தர், பொரேவியாவிற்கு ஆதரவளிக்கும் காரணம் - ஜார்ஹான்பூரை பொரேவியா ஆக்கிரமித்த பின்னர், அதில் பாதி லூத்தரின் சொத்தாகிவிடும்.
அவனுக்கு ஏன் இது வேண்டும்? அதை லூத்தொரியா என்று புதிய நாடாக மாற்றி அங்கிருக்கும் வளங்களைத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தத்தான்!

பொரேவியா நாட்டின் சர்வாதிகாரி வேசில் கர்க்கோஸ் இஸ்ரேலின் பிரதமர் நேத்தன்யாகுவின் நகல். இதை வேடிக்கை பார்ப்பது போல் நடித்து, அதே சமயம் உதவி செய்யும் லூத்தர்கார்ப் நிறுவனம், இஸ்ரேலை ஃபண்ட் செய்யும் பல பில்லியன் டாலர் கம்பெனிகளின் கேலிச்சித்திரம்.
ஜார்ஹான்பூரின் மக்களோ பாலஸ்தீன மக்களின் அவல நிலையை பிரதிபலிக்கிற கண்ணாடி!
பொரேவியாவின் படை வெள்ளைக்காரர்களாகவும், ஜார்ஹான்பூரிய மக்கள் மத்திய கிழக்கைச் சார்ந்த மக்கள் போலும் சித்திரித்திருப்பது இந்த தியரியை இன்னுமே வலுப்படுத்துகிறது.
இவர்களை சூப்பர்மேன் ஆதரிப்பதும் பலரிடம் இருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்றாலே தீவிரவாதிகள் எனப் பட்டம் சூட்டும் ஹாலிவுட்டின் பிறப்பிடமான அமெரிக்காவில், பலரும் நம் கண் முன்னே நடக்கும் இக்கொடூரத்தைப் பற்றிப் பேசவோ, அதை தமது படங்களில் ஓர் பகுதியாகச் சேர்க்கவோ தயங்க மட்டும் இல்லை, மொத்தமாகவே மறுக்கிறார்கள்.

இந்த எதிர்ப்பின் மத்தியிலும் இந்த படக்குழு தாங்கள் கூற வரும் செய்தியைக் கைவிடவில்லை. பாலஸ்தீன சிறுவன் ஒருவன் சூப்பர்மேனின் கேப் அணிந்து அழிவு நிலையில் இருக்கும் அந்தத் தெருவில் நடக்கும் புகைப்படம் மனதை உருக்குகிறது.
அதே காட்சியைப் படத்தில் ஒரு சிறுவன் சூப்பர்மேனின் சின்னம் போட்ட கொடியைத் தூக்கி அவரின் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் காட்சியில் நமக்குள் எழும் அலைபோன்ற ஒரு நம்பிக்கை - அது சினிமாவால் மட்டுமே நடக்கும் மேஜிக்!
சூப்பர்மேன் என்பவர் மக்களுக்கான ஹீரோ. வேற்றுகிரகவாசியாகவே இருந்தாலும் மனிதநேயத்தின் முன்மாதிரி! தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், தேவன் என்ன, தன் பெற்றோரே செய்தாலும் விடமாட்டார் என்பதை மனதைத் தொடும் விதத்தில் காட்டியது இப்படம்.
"இதுதான் சூப்பர்மேன்!" என்று ஆச்சர்யப்பட வைத்தது இப்படம்!

இன்றைய சமுதாய சூழலில் இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியும், மக்களிடையே அது கொண்டு சேர்த்த செய்தியும் நம்பிக்கையூட்டும் பெரு நெருப்பு!
ஏனெனில் சூப்பர்மேன் ஒரு கதாபாத்திரமாகப் பேசும் வசனங்கள், அவரை வைத்துச் சித்திரிக்கப்படும் காட்சிகள் அனைத்தும் இந்தப் போர்க்கால சமயத்தில் மனிதர்களாய் நாம் நடைமுறைப்படுத்த வேண்டியவை.
அதை உணர்த்திய படக் குழுவிற்கு இந்த வெற்றி முதல் படியே! இதன் மூலம் சூப்பர்ஹீரோ படங்களின் நிறமும் மாறியிருப்பது நெகிழ்ச்சியானதொரு விஷயமே!
இதிலிருந்து நாம் எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு துருப்புச்சீட்டு - Kindness is the new punk rock!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...