தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை
தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குத் திருட்டில் ஈடுபட்ட மூன்று தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் வாக்குரிமை பயணத்தை ராகுல் காந்தி பிகாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
இரண்டாவது நாளாக ஒளரங்காபாத், கயா ஜி-யில் ராகுல் காந்தி தலைமையில் வாக்குரிமைப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
கயா ஜியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நனைந்தபடி, மக்கள் மத்தியில் திங்கள்கிழமை இரவு ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது ராகுல் பேசியதாவது:
”முழு நாடும் உங்களிடம் பிரமாணப் பத்திரம் கேட்கும் என்று நான் தேர்தல் ஆணையத்திடம் கூற விரும்புகிறேன். எங்களுக்கு சிறிது அவகாசம் கொடுங்கள், ஒவ்வொரு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளிலும் உங்கள் திருட்டை மக்கள் மத்தியில் நாங்கள் அம்பலப்படுத்துவோம்.
பிரதமர் மோடி சிறப்பு தொகுப்பு குறித்து பேசுவது போல், தேர்தல் ஆணையமும் பிகாருக்கு ’சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்’ என்ற சிறப்பு தொகுப்பைக் கொடுத்துள்ளது. இது ஒரு புதிய வகையான வாக்குத் திருட்டு.
நான் சொல்வதைச் செய்பவன். மேடையில் பொய் சொல்ல மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையர்கள் பாஜக உறுப்பினராக அவர்களுக்கு வேலை செய்கிறீர்கள் என்று தேஜஸ்வி கூறினார். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் பிகார் மற்றும் தில்லியில் இந்தியா கூட்டணி ஒரு நாள் ஆட்சி அமைக்கும். அன்று மூவர் மீதும் நடவடிக்கை எடுப்போம். முழு நாட்டின் வாக்குகளையும் திருடியுள்ளீர்கள்.
வாக்குத் திருட்டு என்ற பெயரில் அரசியலமைப்பையும் பாரத மாதாவையும் தாக்குகிறார்கள். அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்த யாரையும் விடமாட்டோம். தேர்தல் ஆணையர்கள் தங்கள் வேலையைச் செய்யாவிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.