பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் (51) கடந்த 2017ஆம் ஆண்டுவரை இருமுறை எம்எல்ஏவாக பணியாற்றியுள்ளார். சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்த பகவான் சர்மா, தற்போது ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியில் இருந்து வருகிறார். இவர், 41 வயது பெண்ணுடன் நெருங்கிப் பழகிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் இருவருக்கும் 8 வயது குழந்தையும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரில், "வியாபார நிமித்தமாக பகவான் சர்மா ஆக. 14ஆம் தேதி பெங்களூர் வந்திருந்தார். என்னையும், என் மகனையும் பெங்களூருக்கு வருமாறு கூறியிருந்தார். அதன்பேரில் நாங்களும் பெங்களூர் வந்திருந்தோம். சித்ரதுர்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு எங்களை அழைத்துச் சென்றார். ஆக. 17ஆம் தேதி கெம்பே கெளடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் எங்களை தங்கவைத்தார். அப்போது எனது விருப்பத்துக்கு மாறாக, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றார். பாலியல் ரீதியான விருப்பத்துக்கு இணங்காவிட்டால், என்னைக் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டினார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பகவான் சர்மா மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸôர் தெரிவித்தனர்.