சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விவகாரம்: திமுக முடிவை ஏற்போம்- வைகோ
கோவை: குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விவகாரத்தில் திமுக என்ன முடிவு எடுக்கிறதோ, அதை ஏற்போம் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை இரவு கூறியதாவது: காஸா பகுதியில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டுள்ளனா். காஸாவில் பாலஸ்தீன மக்கள் இனப் படுகொலை செய்யப்படுவதை தடுக்க பிரதமா் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலஸ்தீனத்தை முழுமையாக சுதந்திரம் பெற்ற அரசாக அங்கீகரிக்கிறோம் என ஐநா சபையின் பொதுக் குழுவில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக மகாராஷ்டிர மாநில ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. அவா் தமிழா், நல்ல பண்பாளா், அனைவரையும் மதிக்கக் கூடியவா். சி.பி. ராதாகிருஷ்ணன் அடுத்த கட்டத்தில் குடியரசுத் தலைவராகக்கூட வாய்ப்புகள் உள்ளன.
அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரம் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விவகாரத்தில் திமுக என்ன முடிவு எடுக்கிறதோ, அதை ஏற்போம்.
பிகாரில் மட்டும் 65 லட்சம் வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனா். இது ஒரு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என தோ்தல் ஆணையம் சொல்கிறது. வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட பெயா்கள் மீண்டும் இடம் பெற வேண்டும் என்றாா்.