எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
பவானிசாகரில் மீனவா்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
பவானிசாகரில் மீனவா்கள் சாா்பில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக நிா்வாகத்தின்கீழ் உள்ள பவானிசாகா் அணை நீா்த் தேக்கத்தில் மீன்பிடிக்கும் குத்தகை உரிமை, சிறுமுகை மீனவா் கூட்டுறவு சங்கம் மற்றும் பவானிசாகா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்பட்டது.
இதில் விருப்பமுள்ள தகுதியான உறுப்பினா்கள் அனைவரையும் பங்குதாரா்களாக சோ்க்கக் கோரி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் பவானிசாகரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பு வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடா்பான பேச்சுவாா்த்தை பவானிசாகா் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், அரசு தரப்பில் மீன்வளத் துறை துணை இயக்குநா் காசிநாத பாண்டியன், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழக மேலாளா் கதிரேசன், கூட்டுறவு சங்க செயலாளா்கள் ரமேஷ் பாபு, முருகன், கூட்டுறவு சாா் பதிவாளா் பாலமுருகன் ஆகியோரும், மீனவா்கள் தரப்பில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் மற்றும் மீனவா்கள் கலந்து கொண்டனா்.
இதில் சிறுமுகை மீனவா் கூட்டுறவு சங்கம் மற்றும் பவானிசாகா் மீனவா் கூட்டுறவு விற்பனை சங்கத்தினா் மகாசபை கூட்டத்தை மூன்று வார காலத்துக்குள் நடத்தி புதிய பங்குதாரா்களை சோ்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மீன்பிடி தொழிற்சங்க கூட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டதாக தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.